அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய விடுதி மாணவர்களின் வெளியீடான தென்றலை, கவிதாயினி உள்வாங்கிக் கொள்கின்றது விமர்சனமாய்.......!
சஞ்சிகையின் பெயர் - தென்றல்
சஞ்சிகை ஆசிரியர் - நேகம பஸான்
விலை - 200 ரூபா
பக்கங்களின் எண்ணிக்கை 58
உணர்வுகளின் ஆளுகையை வெளிப்படுத்துவது மனம். அந்த மனதின் அருட்டல்கள் வரிவடிவமாகும் போது , அவையே இலக்கியத்தின் அஸ்திவாரக் கற்களாக மாற்றப்படுகின்றன. அந்தவகையில் பேசப்படும் இலக்கியங்களே காலத்தையும் வென்று நிற்கின்றன என்பது கண்கூடு.
"தென்றல்" சஞ்சிகை .............!
மாணவர்களின் உணர்வுகள் சங்கமிக்கப்பட்ட தளம்.........கன்னிச் சஞ்சிகை..........மாணவர்களுக்கான முன்னோடிச் சஞ்சிகை! அநுராதபுர ஸாஹிரா மகா வித்தியாலய விடுதி மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட முதல் கனவு..................இலக்கிய வருடல்!எப்போதும் நம் எல்லோர் மனங்களையும் "தென்றல்" நனைத்துச் செல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்பில், சஞ்சிகையின் நாமம் தென்றலாகி , நம்மை எட்டிப்பார்க்கின்றது. முகப்பட்டையை பார்க்கும் போது, கடற்கரையோரமொன்றில் வளைந்து நிற்கும் தென்னை மரமொன்று, மானசீகமாக தென்றலை உறிஞ்சி மகிழ்வோடு இலயித்துக் கொண்டிருப்பதைப் போன்ற பிரமிப்பு நமக்குள் முகிழ்க்கின்றது...........என்னையுமறியாமல் மாணவர் ஆக்கங்களை விழிகளுக்கு விழ வைக்கும் எதிர்பார்ப்புடன் தென்றலின் ஒவ்வொரு பக்கங்களையும் மெதுவாகப் புரட்டுகின்றேன். அடடா.......கனாதியான வரிகள்........அழகான சிந்தனைப் புரட்டல்கள். தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான மாணவர்களின் கலை அறுவடைகளலல்லவா அவை!
பாடசாலை அதிபர், பிரதி அதிபர், இதழாசிரியர் நேகம பஸான் ,விடுதி நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.எல்.மிஸ்கீன் ஆசிரியர் ஆகியோரின் ஆசிச் செய்திகளுடன் தனது கன்னி, இலக்கியப் பயணத்தை ஆரம்பிக்கும் தென்றல், தனது இறுதிப் பக்கத்தில் தன்னுடன் ஒட்டியுறவாடிய விடுதி மாணவர்களின் பெயர் விபரங்களை இணைப்புச் செய்துள்ளது.
கவிதைகள், கட்டுரைகள், நம் சிந்தனையைத் தொட்டு நிற்கக் கூடிய தகவல்கள், உரையாடல்கள், வரலாற்றுத் தகவல்கள்,சிறுகதை, மருத்துவத் தகவல் போன்ற மகுடங்களில் நிமிர்ந்து நிற்கும் மாணவ ஆக்கங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிகளோடு உறவாடிக் கொண்டிருந்தன.
கட்டுரைகளும் நம் சிந்தனையோட்டத்துக்கு வாய்க்கால் நீட்டுகின்றன."உலக ரீதியில் முஸ்லிம்களின் நிலை", "இளைஞர்கள்" ,"விண்வெளிப் பயணங்களின் பலாபலன்கள்", "மருத்துவத்தில் முஸ்லிம்களின் பங்கு", "அறிவியலும் குர்ஆனும்", "கல்வி" எனும் தலைப்புக்களில் தலைகாட்டும் பதிவுகள் சிறந்த கருத்துக்களை நம்முள் தூவி நிற்கின்றன.
மாணவர்களின் சிந்தனைத் தூண்டல்கள் பெரும்பாலும் கல்வியைச் சுற்றி நிற்பது ஆரோக்கியமான விடயமே. அவர்கள் வித்தியாசமான பார்வைகளில், கோணங்களில் கல்வி பற்றிய பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
"இரகஸியம்" உரைநடைச் சிறுகதை வித்தியாசமான கதையமைப்பு."நட்புக்காக ஒரு நண்பன்" எனும் தலைப்பின் கீழ் பதிவாகியுள்ள இந்த வரிகளின் ஆழத்தைப் பாருங்கள். "மனிதன் திகதி குறிக்கப்பட்ட மரண தண்டனை கைதியாவான், ஆதலால் உன் வாழ்வை இம்மைக்காக செலவிடுவதோடு நின்று விடாமல், மறுமைக்காகவும் நேரத்தை ஒதுக்கிக் கொள்.."
உயர்தரம் கலைப் பிரிவில் கற்கும் இம் மாணவனின் சிந்தனையின் உயிர்ப்போட்டம் ஆழ்மனதை லேசாய் வருடிச் செல்கின்றது.
கல்வி, தாய்மை, இயற்கை, யதார்த்தமான வாழ்வியலின் படிநிலைகள் போன்ற அம்சங்கள் கருக்கட்டப்பட்டுள்ளன கவிதைகளுக்காக
"தாயின் துயரம்" எனத் தலைப்பிட்டு, அன்னையின் நிகரற்ற பாசத்தைக் கவி யாத்த ரஸ்மியின் கவியுடன் , தென்றல் தன் பக்கங்களை மெதுவாக வருட ஆரம்பிக்கின்றது.
மேலும் சப்ரான்,
"மறை தந்த இறைதூதர் குறையிலா நபி நாதர்
உலகெல்லாம் புகழ் பாடும் நிகரில்லாப் பணியாளர்
எம் பெருமான் முஹம்மது நபி"
என நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுகின்றார்.
தொடர்ந்து வருகின்ற சில கவிதைகளில் என் பார்வையைச் செலுத்திய போது, பின்வருவன என கருத்துக்களாக இங்கு உறைந்து நிற்கின்றன..
இந்த மாணவ மனங்களை பாலஸ்தீனக் கதறல்களும் உலுக்கியுள்ளன என்பதை "பாலஸ்தீனுக்கான உனது அர்ப்பணிப்பு என்ன" எனும் கவிதை வலிப் போடு பின்வருமாறு ஒலிக்கின்றது.
"இஸ்லாமிய இளைஞனே- இனி
பாலஸ்தீனுக்கு விடிவு பிறக்க - உன்னால்
ஆயுதம் எந்த முடியவல்லை- தினம்
இரு கை ஏந்தியவாறு பிரார்த்தித்து விடு!"
"விரும்பிச் செயலாற்று" எனும் தலைப்பிலிடம் பெற்ற ஹாகாசின் சிந்தனையோட்டம்...இவ்வாறு அலைகின்றது நம்முள் !
" நாளும் வாழ்ந்திட நீ விரும்பு
நாட்டில் நீயொரு செங்கரும்பு
காலம் என்பதை பொன்னாக்கி
கல்வி என்பதை பொருளாக்கி"
மப்ராஸ் எனும் மாணவனின் கல்வி பற்றிய கவிதையில், காணப்படும் இவ்வரிகளும் என்னைக் கவர்ந்தன.
"திரையிட்டு இருந்த - என்
திரையைக் கிழித்து
சமூகத்தினுள் என்னையும்
பூச்சியாய் மாற்றியது
இப் புனித கல்வியே!"
தமிழை நேசிக்கின்ற, வாசிக்கின்ற அனைவருமே இலக்கியம் புனைந்து மனம் மகிழ துடிக்கின்றவர்கள். அந்த வகையில் " விடியலை நோக்கிய விவரணம்" எனும் தலைப்பில் விடியலை புது விதமாய் நிரோஷ்கான் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.
" காலை தரிசனத்தில்
பறவைகளின் முத்தம்
பிழிந்து
எச்சங்களின் மிச்சம்
பனித்துளிகளின் மேல்
பாயின்றி படுத்துக் கிடக்கும்"
(விடியலை நோக்கிய விவரணம், சிரம் தாழ்த்துவோம் எனும் இரண்டு கவிதைகளும் 49ம் பக்கத்திலும் 53ம் பக்கத்திலும் தவறுதலாக இடம் பிடித்து விட்டன . இயற்கை எனும் கவிதையும் இரண்டு பக்கங்களை ஆக்கிரமித்துள்ளது.)
இந்த பதினாறு வயது மாணவனின் புதுக்கவிதையாற்றல் மன மகிழ்வு தருகின்றது.
கல்லூரிக் காலமென்பது யாவருக்கும் மறக்க முடியாத இனிய காலம். அதிலும் விடுதி வாழ்க்கையென்பது அலுப்பும், சலிப்பும், குறைகளும் கூட குதுகலமாக, வேடிக்கையாக மாற்றப்படுகின்ற காலமென்பதை அர்ஷாத் எனும் மாணவன் தனது "வீடா? விடுதியா" எனும் கவிதையில் பதிவிட்டுக் காட்டுகின்றார்.
இவ்வாறு பல மாணவர் ஆக்கங்கள். அவற்றுள் இவை சிறு துளிகளே!
இவை மாணவர் ஆக்கங்கள்.......அவர்களது ஆர்வத்தின் உந்தமே இப்படைப்புக்கள். சகல ஆக்கங்களிலும் இங்கு இலக்கிய வரம்புகளைத் தேடுவது பொறுத்தமற்றது. எனினும் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் நம்மை மறைந்தும், முகம் காட்டியும் எட்டிப் பார்க்கின்றன. எதிர்காலங்களில் இவ் வெழுத்துப்பிழைகளைத் தவிர்ப்பது நலம்..மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் அருகி வருவதனால், இலக்கணப் பிழைகளும், எழுத்துப் பிழைகளும் அதிகரித்து வருவதை நாம் காணலாம்.
மிகச் சிறப்பான முயற்சியே இச் சஞ்சிகை.....ஆனால் இனிவரும் வெளியீடுகளில் படங்களை சிறிதாக்கி, பதிவுகளின் எழுத்துக்களின் அளவை சற்று அதிகரியுங்கள். இது தென்றலின் செழுமையை சற்று குறைத்து விடலாம் என்பது என் பார்வை...
குறுகிய காலத்தினுள், நிறைவுடன் வெளி வர முயற்சித்த தென்றலே, காலப்போக்கில் நீ சிறு சிறு கீறல்களைக் கலைந்து நிறைவு பெறுவாய் என்பது என் நம்பிக்கை.......வாழ்த்துக்கள் விடுதி மாணவர்களுக்கும் சஞ்சிகை ஆசிரியருக்கும்! !