Sunday, February 24, 2013

கெகிராவ ஸஹானாவுடன் சில நிமிடங்கள்....

        இன்று (23.02.2013) வழமைபோல எனது புவியியல் வகுப்புக்களை முடித்துவிட்டு  விடுதியிற்குத் திரும்பும் வேளை , கவிஞர் நாச்சியாதீவு பர்வீன்        யாத்ராவின் 22ம் இதழ் ஒன்றைத் தந்து முக்கியமான ஒருவரிற்கு அதனை ஒப்படைக்கும் படி வேண்டிக்கொண்டது நினைவிற்கு வந்தது. அந்த முக்கிய நபர் யார் என்றால்,  எனது கவிதைத் தாய்களில் முக்கியமானவர். அநுராதபுரம் கலை இலக்கியத் தூண்களில் மிகவும் முக்கியமானவர். அவர் தான் கெகிராவ ஸஹானா என்ற  பெண் (பொன்) இலக்கியவாதி.

        என் நீண்ட நாள் ஆசை அவரை சந்தித்து அவரிடம் எப்படியாவது நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் அவரின் மூலமாக எனது கவியார்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று......

        அவரின் வீட்டினை அடைவதில் எனக்கு சிரமம் ஏதும் இருக்கவில்லை. காரணம் அகன்று உயர்ந்த ஒரு வீடாயைால் கனப்பொழுதில் அடையாளம் கண்டுவிட்டேன். தயக்கத்துடன்  கோலிங் பெல்லை அடித்தேன். ”யாரு?” என்றதுகள் அவரின் அழகிய பிஞ்சுகள். ”ஸஹானா டீச்சர் இருக்காங்களா ?” என வினவினேன். ”ஆம்” என்று உள்ளே அழைத்து அமரச்செய்தார்கள் அந்த பிஞ்சுகள்.

      அப்போதுதான் அநுராதபுரத்தில் பல இலக்கியங்களைப் படைத்த தற்பெருமை என்பன சிறிதும் இன்றி எளிமையான தோற்றத்தில் வந்தார் கெகிராவ ஸஹானா.அநுராதபுரத்தில் பின்தங்கிய காலத்தில் இலக்கியத்தினை தாங்கிப்பிடித்து அதற்கு வலுவூட்டியவர்களில் ஒருவராகத்திகழும் இவர் மூத்த எழுத்தாளராக வலம் வருவதற்குக் காரணம் அவரின் பணிவும் தன்னடக்கமுமாகும். இவரிடம் நான் கண்ட ஒரு உண்மை என்னவெனில் அநுராதபுரகால இலக்கிய மேம்பாடு , பின்னடைவு என்பன பற்றி மிகுந்த அக்கறை கொண்டவர். அவரோடு நீண்ட நேரம் உரையாடக்கிடைத்தது. அவரின் படைப்புகள் தொடர்பாக நான் அவர் சொல்லக் கேட்ட சில விடயங்கள் என் மனதில் பதிந்தது. அது,

            அநுராதபுர மாவட்டத்தில் மரதன்கடவல என்ற இடத்தில் பிறந்த அவர் அ.கெகிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியைத்  தொடர்ந்தார். பின்பு அப்பாடசாலையிலேயே க. பொ.சா.தரம் வரை பயின்று விட்டு உயர்தரத்திற்காக கம்பளை ஸாஹிராவிற்குச்சென்றார். பின்பு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று தற்போது ஆசிரியையாகக் கடமையாற்றுகின்றார்.

        அவரின் முதல் கவிதையான ”மழை” அப்போது வானொலி அறிவிப்பாளராக இருந்த பீ.எச். அப்துல் ஹமீட் அவர்களினால் ”ஒலி மஞ்சரி” யில் வாசிக்கப்பட்டது.. இதன் பின்பே அவர் கால் தடம் அதிகமாக பதிவாக ஆரம்பித்தது. அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டு கவிதாயினியின் அவர்களின் முதல் சிறுகதைத்  தொகுதியான ” ஒரு தேவதைக் கனவு” வெளிவந்தது. அதன் பின்னரான அவரது இலக்கிய வாழ்வு வித்தியாசத்தை உணர்ந்தது. அத்தொகுப்பிற்குக் கிடைத்த வரவேற்பே இதற்குக்  காரணம்.

           பின்பு ஐந்தாண்டுகள் கழித்து 2002 ம் ஆண்டு ”இன்றைய வண்ணத்துப் பூச்சிகள்” என்ற கவிதைத் தொகுதி வெளிவந்தது. அதனைத்தொடர்ந்து 2009 ம் ஆண்டு முதல் குருநாவல் ” ஒரு கூடும் இரு முட்டைகளும்” என்ற தலைப்பில்  வெளிவந்தது. இவை ஒவ்வொன்றின் மூலமாகவும் இவரை் இலக்கிய உலகில் புது தடம் பதித்துவிட்டார் என்றே கூறவேண்டும். அடுத்து 2010ம் ஆண்டு ” சூழ ஒடும் நதி“ ஜெயகாந்தன் படைப்புக்கள் பற்றிய ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. அதுவரையில்  ஜெயகாந்தன் பற்றி எந்த புத்தகங்களும் வெளிவந்திருக்கவில்லை. இவ்வாய்வு நூலிற்கு மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது கிடைத்தது.

           கடைசியாக 2011 ம் ”ஆண்டு இருட்தேர்” என்ற கவிதைத்தொகுதி வெளியானது... இவை இத்தனையையும் தாண்டி சிந்திக்கின்றபோது ஒரு  விடயம் தெளிவாகத்தெரிகின்றது. அது, அவரின் இலக்கியத் தாற்பரியங்கள் அபரிமிதமானது.

          தன்னை பல விதங்களில் அடையாளப்படுத்திக்கொண்ட கெகிராவ ஸஹானா மேலும் தன் பெயர் மேலோங்கச்செய்வார் என்ற நம்பிக்கையில் பிரிந்து வந்தேன்........

(இவரின் படைப்புக்கள் பற்றி முழுமையான விளக்கங்களோடு மிக விரைவில் சந்திப்போம்)


நேகம பஸான்